
குவாந்தான், ஜனவரி-3 – முதல் பயணிகள் இரயில் பெட்டிகள் குவாந்தானை வந்தடைந்திருப்பதை அடுத்து, கிழக்கு கடற்கரை இரயில் இணைப்பு திட்டமான ECRL முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இவை, குவாந்தான் துறைமுக நகரில் இறக்கப்பட்டு, கெபேங் (Gebeng) ECRL நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
மலேசியாவின் அடையாளங்களான பாத்திக் மற்றும் வாவ் பட்டத்தின் அலங்காரத்துடன், 6 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார இரயில்கள், ஒரே பயணத்தில் 430 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.
665 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முதல் கட்ட ECRL வழித்தடம் கிளந்தான், கோத்தா பாரு முதல் சிலாங்கூர் கோம்பாக் வரை உள்ளடக்கியுள்ளது.
இவ்வாண்டு டிசம்பரில் நிர்மாணிப்பு முடிவடைந்து 2027 ஜனவரியில் பயணிகள் சேவை தொடங்கும்.
இந்த இரயில் திட்டம், கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கும் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, வணிகம், சுற்றுலா மற்றும் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



