
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-5,
ஜோர்ஜ்டவுன் குவீன் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற இரத ஊர்வலம் பக்தர்களுக்கு மறக்கமுடியாத தருணமாக அமைந்தது.
நவராத்திரி பூஜை நிறைவையொட்டி, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரதம், அம்பாளை சுமந்து லிட்டில் இந்தியா முழுவதும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தது .
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் விஜயதசமி தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரதம் கரைக்குடி பாணியில் அமைக்கப்பட்டுள்ளதாக, அதன் துணைத் தலைவரும் செனட்டருமான Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறினார்.
இது 23 அடி உயரம், 9 அடி அகலம் கொண்டதாகவும், 6 டன்களுக்கும் அதிக எடையுடையதாகவும் உள்ளது.
தேக்கு மரம் மற்றும் வலுவான மரங்களால் வடிவமைக்கப்பட்ட இந்த இரதம் 4 கடின ரப்பர் சக்கரங்கள் மீது அமைந்துள்ளது.
RM200,000 மதிப்புள்ள இந்த இரதம் முழுக்க முழுக்க ஒரு பக்தரின் தனிப்பட்ட நன்கொடையால் உருவாக்கப்பட்டதாகும்.
இது பினாங்கின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பேணுவதில் சமூகத்தின் அக்கறையை வெளிப்படுத்துவதாக லிங்கேஷ்வரன் வருணித்தார்.
இந்த இரத ஊர்வலத்தின் தொடக்க விழாவில் நிதித்துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங், அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், பினாங்கு ம.இ.கா தலைவர் ஜெ.தினகரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
திரு. அரசு தலைமையிலான கோவில் நிர்வாகம் மற்றும் இளைஞர்களின் கடும் உழைப்புக்கு அறப்பணி வாரியம் நன்றித் தெரிவித்துக் கொண்டது.