
கூச்சிங், மார்ச்-10 – சரவாக், கூச்சிங்கில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் ஆவேசமாக நடந்துகொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பெரும் இரைச்சலான இசையுடன் தேவாலயத்தின் முன் வாசலில் காரில் வந்திறங்கிய 23 வயது அவ்விளைஞர், கையில் மதுபான பாட்டிலையும் வைத்திருந்தார்.
உள்ளே நுழைந்தவர், திடீரென ஆக்ரோஷமாகி, வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி தகாத வார்த்தைகளால் கத்தினார்; பின்னர் கையிலிருந்த மதுபான பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு கோபத்தில் வெளியேறினார்.
அச்சம்பவம் குறித்து புகார் கிடைத்திருந்த நிலையில், அவ்வாடவரின் குடும்பத்தாரே முன்வந்து வாக்குமூலம் அளித்ததாக, கூச்சிங் போலீஸ் தலைவர் Mohd Farhan Lee Abdullah கூறினார்.
மனநலம் பாதிக்கப்பட்ட அவ்வாடவர் கோத்தா செந்தோசா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதற்கான ஆதாரமாக ஆவணங்களும் அதன் போது காட்டப்பட்டன.
மருத்துவமனை கொடுத்த மாத்திரையை அவர் சாப்பிட மறந்ததே அச்சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாமென்றும் குடும்பத்தார் போலீஸிடம் கூறினர்.
வைரலான அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.