கூச்சிங்கில் ஆண் சகாக்களின் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலால் மாணவிக்கு மன உளைச்சல்

கூச்சிங், அக்டோபர்-24,
சரவாக், கூச்சிங்கில் வகுப்பு தோழர்களின் தொடர் தொந்தரவு காரணமாக ஒரு மாணவி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இச்சம்பவம் பள்ளி வளாகத்துக்குள் நடந்ததாக கூறப்படுகிறது.
மாணவி அச்சத்தால் பள்ளிக்கு செல்ல தயங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து போலீஸார் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
என்றாலும், அம்மாணவியை 300 முறை கத்தியால் குத்தப் போவதாக மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதாக புகாரில் கூறப்படவில்லை என போலீஸ் தெளிவுப்படுத்தியது.
செவ்வாய்க்கிழமை 2 ஆண் மாணவர்கள் தங்கள் மகளை வாய்மொழியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அம்மாணவியின் பெற்றோர் போலீஸ் புகார் செய்ததாக இணைய ஊடகமொன்று முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அண்மையில் மற்ற பள்ளிகளில் நிகழ்ந்த கொலை மற்றும் கற்பழிப்புச் சம்பவங்களை மேற்கோள்காட்டி, அதே போல் நடக்குமென அவ்விரு மாணவர்களும் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உடனடி நடவடிக்கையாக, 3 நாட்களுக்கு அவ்விரு மாணவர்களையும் இடைநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம், அவர்களில் ஒருவனை வேறு வகுப்புக்கும் மாற்றியது.
போலீஸ் தரப்பில் இருவருக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவியிடம் நேரில் மன்னிப்புக் கேட்கவும் உத்தரவிடப்பட்டது.
மாணவி, மனஉளைச்சலிலிருந்து மீண்டு வர ஏதுவாக அக்டோபர் 30 வரை விடுமுறையில் உள்ளார்.



