
திருச்சூர், ஆகஸ்ட் 28 – கேரளா குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலின் புனிதக் குளத்தில் கால் கழுவிய வீடியோவை பகிர்ந்த பிரபல யூடியூபர் ஜாஸ்மின் ஜாஃபர் (Jasmin Jaffar) கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து அக்கோவில் நிர்வாகம் கோவில் சுத்திகரிப்பு பூஜையை தொடங்கியுள்ளது.
24 வயதான ஜாஸ்மினுக்கு, யூடியூப்பில் 1.6 மில்லியன் பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளனர்.
இந்நிலையில், அவர் பதிவிட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு குருவாயூர் தேவஸ்தானம் காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கடும் எதிர்ப்புகளுக்குப் பின், ஜாஸ்மின் அந்த வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்ட நிலையில் அவர் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் செயல்படவில்லை என்றும் தனது அறியாமையால் இத்தவறு ஏற்பட்டதென்றும் விளக்கமளித்தார்.
இதனிடையே கோயில் நிர்வாகம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு புண்யாஹம் அதாவது கோவிலை சுத்தம் அல்லது சுத்திகரிப்பு செய்யும் சடங்கை தொடங்கியுள்ளது.
கோவிட் ஊரடங்கின்போது சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற ஜாஸ்மின், பிக் பாஸ் மலையாளம் சீசன் 6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றவர் என்றும் அப்போது ஏற்பட்ட தனிப்பட்ட சர்ச்சைகள் காரணமாகவும் அவர் செய்திகளில் இடம்பிடித்திருந்தார் என்றும் உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.