
கோலாலாம்பூர், ஜனவரி-15,
தை முதல் நாளான பொங்கல் திருநாளை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மலேசியாவிலும் பொங்கல் விழா உற்சாகமாகக் களைகட்டி வருகிறது.
குறிப்பாக, தாய்க்கோவிலான கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில், இவ்வாண்டும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டு, அதன் பின்னர் சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மகிழ்ச்சி மற்றும் பக்தி நிறைந்த சூழலை பகிர்ந்து கொள்ளும் வகையில், அவர்களில் சிலரை வணக்கம் மலேசியா பேட்டி கண்டது.
பொங்கல் வைப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை பத்து மலை வளாகத்தில் நடைபெறும் தேசிய ஒற்றுமைப் பொங்கல் நிகழ்ச்சியில் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு பொது மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இவ்வேளையில், நாடு முழுவதும் வீடுகளிலும் மக்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
காலையிலேயே பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைத்து, குடும்பமும் உற்றார் உறவினர் சகிதமுமாக மகிழ்ச்சியைப் பரிமாறி வருகின்றனர்.
அக்காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.



