நியூ யோர்க், நவம்பர்-22 – இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் அதானி குழுமத்தின் தலைவருமான கௌதம் அதானி மீது அமெரிக்காவில் பல கோடி டாலர் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது, பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், நியூ யோர்க் நீதிமன்றத்தில் அவ்வழக்கைப் பதிவுச் செய்துள்ளது.
இதையடுத்து அதானிக்கு கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதானி, அவரது மருமகன் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர், சூரிய சக்தி விநியோக குத்தகைகளைப் பெறுவதற்காக தமிழ் நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகளின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளனர்.
இதன்மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும்.
இது தவிர, அதே 2022-2024 இடைப்பட்ட காலத்தில் Adani Green Energy நிறுவனம், தவறான மற்றும் குழப்பமான அறிக்கைள் மூலம், 3 பில்லியன் டாலர் (13.4 பில்லியன் ரிங்கிட்) பணத்தை கடனாகவும், கடன் பத்திரங்கள் (bon) வடிவிலும் பெற்றுள்ளது.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, முதலீட்டாளர்களை அந்நிறுவனம் ஏமாற்றியதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அதானி குழுமம், வழக்கைச் சந்திக்க சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படுமென்றது.
இதனிடையே, மும்பைப் பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவன பங்குகள் சரிந்ததால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டத்தை அது சந்தித்துள்ளது.
Forbes சஞ்சிகையின் தர வரிசைப் படி, 69.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 62 வயது அதானி உலகின் 22-வது பெரும் கோடீஸ்வரர் ஆவார்.