![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/MixCollage-03-Jan-2025-07-09-PM-9293.jpg)
செப்பாங், ஜனவரி-3 – சபரிமலை செல்லும் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA-வில் சிறப்புப் பாதை அமைத்துத் தர போக்குவரத்து அமைச்சு இணங்கியதைத் தொடர்ந்து, இன்று காலை, 150 பேர் கொண்ட முதல் குழுவினர் அச்சிறப்புப் பாதையைப் பயன்படுத்தி சபரிமலை பயணமாகினர்.
சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்.
ஆண்டுதோறும் சுமார் 50,000 மலேசிய ஜயப்ப பக்தர்கள் சபரிமலை செல்கின்ற நிலையில், முழு விரதத்திலிருக்கும் அவர்களுக்கு KLIA-வில் சில அசௌகரியங்கள் ஏற்படுவதாக முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, அவர்களின் வசதிக்காக KLIA-வில் அரசாங்கம் சிறப்புப் பாதையை அமைத்துத் தர வேண்டுமென, மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி கேட்டுக் கொண்டிருந்தார்.
அக்கோரிக்கையை Dr குணராஜ் போக்குவரத்து அமைச்சின் பார்வைக்கு கொண்டுச் சென்றதை அடுத்து, இது சாத்தியமாகியுள்ளது.
ஐயப்ப பக்தர்கள், சுவாமியை தரிசிக்க ஐயப்ப மலைக்கு செல்ல மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா மற்றும் பாத்திக் ஏர் ஆகிய மூன்று விமான சேவைகள் மூலம் திருச்சி மற்றும் கொச்சின் சென்றடையலாம்.
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், குடிநுழைவுத் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
அவ்வகையில் உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரைக்குச் செல்வோருக்கு செய்து தரப்படுவது போன்ற வசதிகள் இனி ஐயப்ப பக்தர்களுக்கும் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சு உறுதியளித்துள்ளது.
காத்திருப்பதற்கான சிறப்பு இடம், சோதனைக்கு தனியிடம் உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.
இன்று தொடங்கி ஜனவரி 14 வரை இச்சிறப்பு ஏற்பாடு தொடருமென்பதால், ஐயப்ப பக்தர்கள் இவ்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென Dr குணராஜ் கேட்டுக் கொண்டார்.
இன்று காலை சபரி மலைக்கு புறப்பட்ட முதல் குழுவினரை Dr குணராஜ் ஜோர்ஜ், நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார், வான் போக்குவரத்து துறை இயக்குனர் ரவுசான், மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி, விமான நிலைய அதிகாரிகள், விமான சேவை நிறுவனங்களின் அதிகாரிகள் என அனைவரும் வழியனுப்பி வைத்தனர்.
இதனிடையே, தங்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஏற்பாட்டினை செய்துத் தந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கும், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கிற்கும் மற்றும் இதர தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் Dr குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துக் கொண்டார்.
குறுகிய காலத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது, மடானி அரசாங்கத்தின் மக்கள் மீதான அக்கரையை காட்டுவதோடு அனைத்து சமூகத்தையும் அரவணைக்கும் போக்கை நிருபிக்கிறது.