
பெட்டாலிங் ஜெயா-புனித இந்து சின்னமான திரிசூலத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தமீம் டஹ்ரி அப்துல் ரஸாக் மீது இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட இருந்த நிலையில், அவர் தற்போது சவுதி அரேபியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், வழக்கு மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், துணை அரசு வழக்கறிஞர் கைருல் அனுவார் ஹாலிம், தமீமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குறைந்தது இரண்டு மாதங்கள் அவசியம் எனக் கோரிக்கை வைத்தார்.
தமீம் பாங்காக் வழியாக ரியாத்திற்கு பயணம் செய்ததாகவும், அவர் சுற்றுலா விசா அல்லது உம்ரா விசாவில் சென்றாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அடுத்த விசாரணை மே 17ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கிடையில், காவல் துறைத் தலைவர் கலீட் இஸ்மாயில், தமீம் தாய்லாந்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவரை மலேசியாவிற்கு மீண்டும் கொண்டு வர தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
மார்ச் 8ஆம் தேதி லங்காவியில் உள்ள பழமையான கோவிலில் திரிசூலத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு தமீம் மீது எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 192 காவல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



