
கோலாலம்பூர், பிப்ரவரி-18 – போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மலேசியர் பன்னீர் செல்வம் பரந்தாமனின் தண்டனையை ஒத்தி வைக்க, மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, KDN எனப்படும் உள்துறை அமைச்சுக்கு அக்கோரிக்கையை வைத்துள்ளது.
பன்னீர் செல்வத்தின் மரண தண்டனை வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 20-ஆம் தேதி நிறைவேற்றப்படவிருப்பதாக, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 நாட்களே எஞ்சியிருப்பதால், இவ்விவகாரத்தின் அவசரம் அவசியம் கருதி உள்துறை அமைச்சு விரைந்து செயல்பட வேண்டும்.
பன்னீர் செல்வத்தின் தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்க, சிங்கப்பூர் அரசாங்கத்தை மலேசியா வலியுறுத்த வேண்டுமென ராம் கர்ப்பால் கேட்டுக் கொண்டார்.
சமுதாயத்தை சீர்குலைக்கும் போதைப் பொருள் கும்பல்களை முறியடிப்பதில் சிங்கப்பூரைப் போன்று மலேசியாவும் கடுமையாக நடந்துகொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம்;
ஆனால் போதைப் பொருள் கும்பலால் தவறாக வழிநடத்தப்பட்டு சூழ்நிலைக் கைதியான நபருக்கு மரண தண்டனை விதிப்பதும், லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் குற்றவாளிகள் இன்னமும் வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதும் ஏற்புடையதல்ல.
எனவே, சிங்கப்பூர் அரசிடம் பேசி, பன்னீர் செல்வத்தை மலேசியாவுக்கு வரவழைத்து இங்கேயே அவர் தண்டனையை அனுபவிக்கவும், அவர் சம்பந்தப்பட்ட வழக்கை இங்கே முறைப்படி நடத்தவும் KDN நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர் செல்வத்தை ஏமாற்றி அவரிடம் போதைப் பொருள் பொட்டலத்தைக் கொடுத்து சிங்கப்பூர் அனுப்பிய கும்பல் குறித்து கடந்த வாரம் இங்கு மீண்டும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து 10 ஆண்டுகள் கத்திருப்புக்குப் பிறகு, ஒரு வழியாக மலேசிய போலீஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பன்னீர் செல்வம் வழங்கியுள்ள ஒத்துழையும் தகவல்களும் மலேசியாவில் விசாரணைக்கு மிகவும் இன்றியமையாதவை; எனவே சிங்கப்பூர் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என தாங்கள் கேட்டுக் கொள்வதாக ராம் கர்பால் சொன்னார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ச்சென், புக்கிட் பென்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷிட், பத்து காவான் முன்னாள் MP கஸ்தூரி பட்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Amnesty International Malaysia, SUARAM, BERSIH, மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் மனித உரிமை செயற்குழு உள்ளிட்ட அரசு சார்பற்ற அமைப்புகளும் பங்கேற்றன.