சிங்கப்பூர் சாலையில் திடீர் பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளி பிச்சை உடையப்பன்

சிங்கப்பூர், ஜூலை-28- சிங்கப்பூர் சாலையில் திடீரென உருவான பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணை, அங்கிருந்த தமிழகத் தொழிலாளர்களே காப்பாற்ற உதவியுள்ளனர்.
தஞ்சோங் காத்தோங்கில் கட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளராக உள்ள பிச்சை உடையப்பன் சுப்பையாவும் இதர சில பணியாளர்களும், சம்பவத்தின் போது பெரும் சத்தத்தைக் கேட்டுள்ளனர்.
சத்தம் வந்த இடத்தை நெருங்கி பார்த்த போது, தண்ணீர் தேங்கியிருந்த திடீர் பள்ளத்தில் கார் விழுந்துகிடந்தது; அதிலிருந்து பெண் வெளியேறுவதை கண்டு அவருக்கு உதவ பிச்சை நினைத்தார்.
ஆனால், அப்படிச் செய்தால் தாங்களும் உள்ளே சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில், பிறகு கயிற்றைக் கொடுத்து 5 நிமிடங்களுக்குள் அப்பெண்ணைக் காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர்.
அப்பெண்ணை உடனடியாகக் காப்பாற்றியாக வேண்டும் என்பது மட்டுமே அப்போது நோக்கமாக இருந்ததாக, சிங்கப்பூரில் 22 ஆண்டுகளாக வேலை செய்யும் 46 வயது பிச்சை கூறினார்.
இதுபோன்ற மீட்புப் பணி அனுபவம் தமக்கு இதுவே முதல் முறை என்றும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், பிச்சை உடையப்பன் மற்றும் சக ஊழியர்கள் விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றியதை, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
தர்மன் தனது ஃபேஸ்புக் பதிவில் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். வலைத்தளங்களிலும் பிச்சை உடையப்பனுக்கும் நண்பர்களுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.