
ஷா ஆலாம், ஜனவரி-13-சிலாங்கூர் மாநில அரசு இனி பன்றிப் பண்ணைகளுக்கு நிதி ஒதுக்காது என சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அறிவித்துள்ளார்.
தஞ்சோங் செப்பாட் பகுதியில் உள்ள பண்ணைகளின் உரிமமும் புதுப்பிக்கப்படாது… அவை படிப்படியாக மூடப்பட்டு புக்கிட் தாகார் பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் உத்தரவிட்டார்.
பொது நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
அதே சமயம், மாநிலத்தில் முஸ்லீம் அல்லாத மக்களுக்கான பன்றி இறைச்சி தேவை குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இந்த கணக்கெடுப்பு, புக்கிட் தாகாரில் பன்றி வளர்ப்பு நியாயமானதாகவும் நிர்வகிக்கக் கூடியதாகவும் இருப்பதை உறுதிச் செய்ய, அதன் அளவு, திறன் மற்றும் நோக்கத்தை தீர்மானிப்பதற்கான அடிப்படையாக இருக்கும் என சுல்தான் ஷாராஃபுடின் சொன்னார்.
சிலாங்கூரில் மையப்படுத்தப்பட்ட பன்றி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் மாநில அரசின் திட்டம் குறித்து முன்னதாக சுல்தான் ஷாராஃபுடின் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Dr Izham Hashim நேற்று அரண்மனையிடம் விளக்கமளித்த நிலையில், இவ்வுத்தரவு வெளியாகியுள்ளது.



