
கோலாலம்பூர், ஜனவரி 19 – சிவப்பு போக்குவரத்து விளக்கை மீறி வாகனம் ஓட்டும் சம்பவங்கள் இன்னும் தொடர்வதால், சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ தெரிவித்துள்ளது.
சிவப்பு விளக்கை மீறுவது சாலைப் பாதுகாப்புக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இதனை கட்டுப்படுத்த JPJ மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொள்ளும் சிறப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் JPJ தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli, கூறியுள்ளார்.
இதற்கிடையில், கெடா ஜித்ரா பகுதியில் சமீபத்தில் நடந்த விபத்தில், சிவப்பு விளக்கை மீறியதாக சந்தேகிக்கப்படும் வாகனம் மோதியதில் 22 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள சம்மன் கட்டண முறையின் கீழ், சம்மன் விதிக்கப்பட்ட நாளிலிருந்து 1 முதல் 15 நாட்களுக்குள் அச்சமனை செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், 16 வது நாளிலிருந்து 30வது நாட்களுக்குள் செலுத்தினால் 300 ரிங்கிட் கட்டணம் 200 ரிங்கிட்டாக வசூலிக்கப்படுமென்றும், அதற்கு மேற்பட்டு செலுத்துபவர்கள் முழுத் தொகையைச் செலுத்த வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, JPJ மற்றும் காவல்துறை விதிக்கும் சம்மன்களுக்கு ஒரே மாதிரியான கட்டண முறையை அமல்படுத்தும் அரசின் உத்தரவின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாக JPJ தெரிவித்துள்ளது.



