
புத்ரா ஜெயா, ஏப் 22 – சீன அதிபர் Xi Jinping கிற்கு தாம் வழங்கிய நினைவுச் சின்னம் தனது தனிப்பட்ட பரிசு என்பதால் அது குறித்து பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லையென போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். மலேசியாவில் தயாரிக்கப்பட்ட அந்த நினைவுச்சின்னத்தை Royal Selangor வடிவமைத்ததாகும்.
அந்த நினைவுச் சின்னம் எனது தனிப்பட்ட பரிசு மற்றும் இதனை அரசு கொடுத்ததாக தாம் எங்கேயும் தெரிவிக்கவில்லயென அவர் கூறினார். இந்த நினைவுப் பரிசு ஒரு தனிப்பட்ட பரிசு, நான் அரசாங்கத்தின் பரிசைப் பற்றிப் பேசவில்லை என்று அவர் இன்று போக்குவரத்து அமைச்சின் மாதாந்திர கூட்டம் மற்றும் குடிமை அன்பைக் கொண்டாடுதல் நிகழ்ச்சிக்குப்பிறகு இதனை தெரிவித்தார்.
நினைவுப் பரிசுகளை வழங்குவது தொடர்பான பிரச்னை குறித்து ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இத்தகவலை வெளியிட்டார். எந்தவொரு அதிகாரப்பூர்வ நெறிமுறையின்றி இந்த நினைவுச் சின்னம் வழங்கப்பட்ட விவகாரம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்த ஒரு சிறிய பதிவு கிளிப் வைரலாகி, அதை தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய பிறகு, அது அதிக கவனத்தைப் பெற்றது.
DAP யை பிரதிநிதித்து அந்தோணி லோக், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருக்கு நினைவுச் சின்னத்தை வழங்குகிறார் என்று தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.
தென்கிழக்கு ஆசியப் பயணத்திற்காக மலேசியாவில் மூன்று நாட்கள் தங்கிய பின்னர், சீன அதிபர் கம்போடியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு, ஏப்ரல் 17 ஆம் தேதி, ராயல் சிலாங்கூரிலிருந்து டிராகன் செதுக்கப்பட்ட தகடு ஜி ஜின்பிங்கிற்கு வழங்கப்பட்டது.
ஜின் பிங்கின் பாதுகாப்பிற்காக நினைவுப் பரிசு பின் வாசலுக்கு அருகில் வழங்கப்பட்டதாக சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்