
புத்ரா ஜெயா, ஜூலை 4 – சீன மக்கள் குடியரசின் இன விவகார ஆணையத்துடன் தேசிய ஒற்றுமை ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது குறித்து தேசிய ஒற்றுமை அமைச்சு ஆராய்கிறது.
அதோடு நேற்று இரவு புத்ராஜெயாவில் சீன மக்கள் குடியரசின் (NEAC) இன விவகார ஆணையத்துடன் இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் மற்றும் சீன மக்கள் குடியரசின் இன விவகார ஆணையத்தின் துணை அமைச்சர் Duan Yijun ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் NEAC காட்டிய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கு தேசிய ஒன்றுமை அமைச்சின் பாராட்டுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கூடுதலாக, மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாகவும் இது செயல்படுவதோடு , குறிப்பாக இன நிர்வாகம், சமூக நல்லிணக்கம் மற்றும் பன்முக கலாச்சார ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களில் சாத்தியமான ஒத்துழைப்பும் ஆராயப்பட்டு வருகின்றன.
இதுதவிர , இரு தரப்பினரும் ASEAN-China Grassroots Social Cohesion Forum போன்ற ஒரு வட்டாரத் தளத்தை அமைப்பதையும் முன்மொழிந்தன.
இது அடிப்படையில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தளமாக செயல்பட முடியும்.
ஒற்றுமை சவால்களுக்கு கண்காணிப்பு மற்றும் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்தும் முயற்சியில், சமூகங்களில் நுண்ணிய மோதல் வடிவங்களைக் கண்டறிந்து, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அமைப்பை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, மெய்நிகர் ரியாலிட்டி (VR), ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) மற்றும் holografi போன்ற அதிவேக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் பாரம்பரிய பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஒத்துழைப்பும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இருதரப்பு உறவு, சமூகத்தில் ஒற்றுமை, உள்ளடக்கிய தன்மை மற்றும் கலாச்சார மற்றும் இன பன்முகத்தன்மைக்கான மரியாதை ஆகியவற்றின் மதிப்புகளை வலியுறுத்தும் Madani மலேசியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தொடர்ந்து வலுப்படுத்தப்படலாம் என்றும் டத்தோ ஆரோன் மற்றும் சீன அதிகாரிகள் நம்புகின்றனர்.