
வாஷிங்டன், ஏப்ரல்-16, போயிங் விமான கொள்முதல் தொடர்பான முக்கிய ஒப்பந்தத்திலிருந்து சீனா பின்வாங்கியிருப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் போயிங் விமானங்களை வாங்க வேண்டாம் என தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
முதல் தவணை தாம் அதிபராக இருந்த போதே, சீனா ஒப்பந்தக் கடமைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை; இதனால் அப்போதே ‘வரிப் போர்’ ஏற்பட்டதை டிரம் நினைவுக் கூர்ந்தார்.
அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து விமானம் தொடர்பான சாதனங்கள் மற்றும் கருவிகளை வாங்க வேண்டாம் எனவும் சீனா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், எதற்கும் அசராமல் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனப் பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்படுமென அமெரிக்காவும், அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரியை விதிப்போம் என சீனாவும் அறிவித்து அதிரடி காட்டி வருகின்றன.