
கோலாலாம்பூர், டிசம்பர்-11 – சபா சட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு சீர்திருத்தம் கோரி புறப்பட்டுள்ள DAP கட்சியின் இந்திய சமூகத்திற்கான உண்மையான கடப்பாட்டை, DHRRA மலேசியா அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சீர்திருத்தங்களுக்காக பிரதமருக்கு 6 மாதக் காலக்கெடு வழங்கியுள்ள DAP, முதலில் இந்தியச் சமூகத்திற்கு அது வைத்துள்ள தெளிவான திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என, DHRRA தலைவர் டத்தோ எஸ். சரவணன் கூறினார்.
குடியுரிமை, B40 வர்க்கத்தினரின் கல்வி இடைவெளி, மித்ரா செயல்திறன், தமிழ்ப் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு ஆதரவு போன்ற முக்கிய பிரச்னைகளை இந்தியச் சமூகம் எதிர்நோக்கியுள்ளது.
இவற்றுக்கான தீர்வுத் திட்டங்கள் என்னவென்று DAP கூற முடியுமா என அவர் கேட்டார்.
சீர்திருத்தம் கோருவது தவறல்ல; ஆனால் அது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும், வெறும் சீன சமூகத்தின் முக்கியப் பிரச்னைகளை மட்டுமே முதன்மைப்படுத்துவது அழகல்ல என அவர் நினைவூட்டினார்.
இவ்வேளையில், தமிழ் மொழியில் பாண்டித்துவம் பெற்ற ஒருவர் முழு அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு இந்தியச் சமூக நலனுக்கான சிறப்பு அமைச்சரவை குழுவும் அமைக்கப்பட வேண்டுமென சரவணன் வலியுறுத்தினார்



