
கோலாலம்பூர், மார்ச்-30-நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்படும் பள்ளிகளில், PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறையை கொண்டு வரத் தயார் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
துணை அமைச்சர் வோங் கா வோ அதனைத் தெரிவித்தார்.
மாணவர்களின் உடல் நலனை பாதுகாப்பதோடு, கல்வி இடையூறு இல்லாமல் தொடர்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
PdPR ஒன்றும் புதிதல்ல; ஏற்கனவே கோவிட் காலத்தில் பழக்கப்பட்ட ஒன்றுதான் என்பதால், நிலைமை மோசமடையும் பகுதிகளில் அதனை நடைமுறைப்படுத்தலாம்.
சுற்றறிக்கைப் படி, பள்ளிகள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப கற்றல் முறைகளை மாற்றிக் கொள்ளலாம் என்றார் அவர்.
வெப்பத்தால் பாதிப்பு ஏற்பட்டாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் தொடருமென துணையமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.
கெடாவில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு இரண்டாம் கட்ட வெப்ப அலை பதிவானதால், கோத்தா ஸ்டார், பெண்டாங் ஆகிய மாவட்டங்களில் ஞாயிறு தொடங்கி PdPR அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், மாணவர்களை உட்படுத்தி இதுவரை வெப்பவாத சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் வோங் கா வோ சொன்னார்.



