
குவாந்தான், ஜனவரி 21 – நேற்று, பஹாங் Jalan Kuantan By Pass சாலையில் அமைந்திருக்கும் Bukit Rangin பகுதிக்கருகே, மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கால்களைப் பின்னால் நீட்டியபடி ‘சூப்பர்மேன்’ பாணியில் ஆபத்தான சாகசம் செய்த இளைஞனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 18 ஆம் தேதியன்று, இந்த ஆபத்தான சாகசத்தை காட்டும் 17 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று புலனத்தில் வைரலானதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Ashari Abu Samah தெரிவித்துள்ளார்.
யமஹா Y15 மோட்டார் சைக்கிளின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் 21 வயது நபர் எனவும் அந்த ஆபத்தான சாகசத்தை செய்தது அவரது 20 வயது நண்பர் எனவும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தனது நண்பரை குவாந்தான் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததைத் தொடர்ந்து அந்த இளைஞன் போலீசாரிடம் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளான்.
இந்நிலையில் இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.



