
குவாந்தான், ஜூலை-14- பஹாங், செராத்திங் MARDI விவசாயப் பூங்காவுக்கு விருந்தினர் போல் அடிக்கடி வந்துபோகும் தாப்பீர், சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு வாக்கில் ஜாலான் குவாந்தான் – கெமாமான் சாலையில் ஒரு MPV வாகனம் அந்த ஆண் தாப்பீரை மோதித் தள்ளியது.
அழிந்து வரும் அரிய வகை விலங்கினத்தைச் சேர்ந்த அந்த தாப்பீர் சாலையைக் கடக்கும் போது, Perodua Alza அதனை மோதியது.
41 வயது காரோட்டுநருக்கு அதில் காயமேதும் ஏற்படவில்லை.
குறைந்தது 150 கிலோ எடைகொண்ட அந்த தாப்பீரின் சடலம், பின்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாப்பீர் பலியானது குறித்து செராத்திங் MARDI விவசாயப் பூங்காவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் சோகப்பதிவு இடம்பெற்றுள்ளது.
அப்பகுதிக்கு வருவோர் மத்தியில் மிகவும் பிரபலமான அந்த தாப்பீரின் மரணம் வனவிலங்கு ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.