
கோலாலம்பூர், நவம்பர் 19 – செராஸ் தாமான் மிஹார்ஜா (Taman Miharja, Cheras) பகுதியில் நேற்று நடைபெற்ற சிறப்பு சோதனையின்போது (Ops Khas), தவறான முறையில் ‘மசாஜ்’ சேவை மற்றும் பாலியல் சீர்கேடு செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 18 வெளிநாட்டு ஆண்களை மலேசிய குடியுரிமைத் துறை (JIM) கைது செய்தது.
இந்த ஒழுங்கற்ற சேவைகள் புலனம் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு சேவைக்கும் 200 முதல் 800 ரிங்கிட் வரை ஆன்லைனில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று குடியுரிமைத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்கரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) கூறினார்.
கைது செய்யப்பட்ட 18 பேரில் 16 பேர் மியான்மார் நாட்டையும், ஒருவர் வியட்நாம் மற்றும் மற்றொருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தகாத சேவைகளை வழங்கியது மட்டுமல்லாமல் தற்காலிக வேலை அனுமதி (PLKS) வைத்திருந்தல், சமூக வருகைப் பாஸை (PLS) கொண்டிருந்தல், நாட்டில் அதிக காலம் தங்கி இருந்தல் மற்றும் செல்லத்தக்க ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருந்தல் போன்ற குற்றங்களும் கண்டறியப்பட்டன.
அச்சோதனையில் கடப்பிதழ்கள், வாடிக்கையாளர் முன்பதிவு புத்தகம் மற்றும் சில தொடர்புடைய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இக்குற்றம் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.



