
செப்பாங், ஜன 21 – குடிநுழைவு பரிசோதனையின்போது செல்லாத சமூக வருகை பாஸ் பயன்படுத்த முயன்றதற்காக, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தினால் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கே.எல்.ஐ.ஏ (KLIA) அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அனைத்துலக புறப்படும் முனையத்தில் நேற்று மாலை மணி 6அளவில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான ( AKPS) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
33 வயதான அந்த நபர் வைத்திருந்த பாஸ் முறையற்றதாகவும் , நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவதாகவும் கண்டறியப்பட்டது.
1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அந்த நபர் மேல் நடவடிக்கைக்காக KLIA அமலாக்கப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே , செல்லாத சமூக வருகை பாஸ் பயன்படுத்துவது உட்பட குடிநுழைவுச் சட்டங்களை மீறும் எந்தவொரு நபருக்கும் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று AKPS வலியுறுத்தியது.



