
ஜகார்த்தா, டிசம்பர்-10 – இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள 7 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் கர்ப்பிணி பெண்ணொருவரும் அடங்குவார்.
நேற்று பிற்பகல் வாக்கில் கட்டடத்தின் முதல் மாடியில் தீ ஏற்பட்டது.
அந்த கட்டடத்தில் Terra Drone Indonesia என்ற ட்ரோன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
தீ வேகமாக மேல் மாடிகளுக்கும் பரவியதால், மதிய உணவு இடைவேளையிலிருந்த பல பணியாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
தீயை அணைக்க 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 30 தீயணைப்பு வண்டிகளும் வரவழைக்கப்பட்டன.
சிலர் மீட்கப்பட்டாலும், பலர் புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தீ ஏற்பட்டதற்கு, ட்ரோன் பேட்டரி வெடிப்பு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனினும் முழு விசாரணை நடைபெற்று வருகிறது.



