தோக்யோ, நவ 26 – திட எரிபொருள் எப்சிலன் எஸ் (Epsilon S) ராக்கெட்
பரிசோதனையின்போது ஜப்பான் விண்வெளி நிறுவனத் தளத்தில் நேற்று பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தெற்கு ஜப்பானின் தொலைதூர ககோஷிமா ( Kagoshima ) வட்டாரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து நெருப்பு மற்றும் வெள்ளை புகைகளின் கோபுர பந்துகள் எழுந்ததை NHK ஒளிபரப்பு கழகத்தின் காணொளி காட்டியது. என்ன நடந்தது என்பதை மதிப்பிட முயற்சிக்கிறோம் என JAXA எனப்படும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததோடு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டது.
காலை 8.30 மணிக்கு தொடங்கிய ராக்கேட் சோதனையின் போது தீ விபத்து ஏற்பட்டபோது 600 மீட்டர் தொலைவுக்கு அப்பால் ஊடகங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. சுமார் 30 வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. மேலும் தீப்பற்றியது போலத் தோன்றிய ஒரு பொருள் கடலை நோக்கிப் பறந்தது என NHK தெரிவித்தது. வெடிப்புக்கு முன் ராக்கெட் இந்திரத்திலிருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் வெடித்ததாக கூறப்பட்டது. JAXA தனது ராக்கெட் திட்டங்களில் பின்னடைவை சந்தித்தது முதல் முறை அல்ல. கடந்த 2023 ஆம்ஆண்டு ஜூலையில் பரிசோதனை செய்யப்பட்ட 50 வினாடிகளுக்குப் பிறகு , எப்சிலன் எஸ் இன் ராக்கெட் இயந்திரம் வெடித்தது.