
ஜித்ரா, ஜனவரி 19 – கெடா மாநிலத்தில் உள்ள ஜித்ரா டோல் சாவடியில், வடக்கு–தெற்கு விரைவுச்சாலையின் வடக்கு நோக்கி செல்லும் பாதையில், இன்று அதிகாலை கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாலை 1 மணியளவில் சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே ஜித்ரா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர் என்று ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், Noor Azhar Tajudin கூறினார்.
சம்பவ இடத்திற்கு சென்றபோது, ஹோண்டா சிவிக் FD வகை கார் முழுமையாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாகவும், கார் சுமார் 85 சதவீதம் சேதமடைந்ததாகவும் அவர் கூறினார். தீயை அணைத்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காருக்குள் இருவர் தீக்காயங்களால் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
சுமார் 20 நிமிடத்திலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் வாகனத்தை வெட்டி திறந்து, உடல்களை வெளியே எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் உயிரிழந்த இருவரின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த மீட்பு நடவடிக்கையில் காவல் துறையினர் மற்றும் சுகாதார அமைச்சு (KKM) ஆகியவையும் பங்கேற்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள் மேல் விசாரணைக்காக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.



