
ஜோகூர் பாரு, செப்டம்பர் 11 – நேற்று நள்ளிரவு உலு திராமில் ஜோகூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 சிறுமிகள் உட்பட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 25 இந்தோனேசியர்கள் , 16 மியான்மர் நாட்டு மக்கள் , நான்கு வங்கதேச ஆண்கள் மற்றும் ஒரு நேபாள நாட்டு ஆணும் உள்ளடங்குவர்.
காலாவதியான விசா, செல்லுபடியாகும் அனுமதி இன்றி நுழைந்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் குடிநுழைவுத்துறை தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
வாடகை வீடுகளில் வெளிநாட்டவர்கள் அதிகமாகக் தங்கியுள்ளனர் என கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாரூஸ் (Datuk Mohd Rusdi Mohd Darus) குறிப்பிட்டார்.
மேலும், வெளிநாட்டவர்களை மறைத்து வைப்பது அல்லது சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துபவர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.