
கோலாலாம்பூர், டிசம்பர் 19-சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு வழிமுறையை ஆராயுமாறு, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், PERKESO-வுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜோகூர் பாலத்தை தினமும் கடக்கும் கிட்டத்தட்ட 400,000 மலேசியத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதிச் செய்வதே இதன் நோக்கம் என்றார் அவர்.
‘Traveller Scheme’ என அழைக்கப்படும் இப்புதிய முயற்சி, அடுத்தாண்டு தொடங்கி ஒரு சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும்.
இத்திட்டம், சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களுக்கு விபத்து மற்றும் அவசர சூழ்நிலைகளில் பாதுகாப்பு அளிக்கும்.
இந்நடவடிக்கையானது, எல்லைத் தாண்டி வேலை செய்யும் மக்களின் நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகும் என அவர் கூறினார்.
மனிதவள அமைச்சர் என்ற முறையில், தலைநகரில் உள்ள PERKESO கோபுரத்திற்கு இன்று முதன் முறையாக வருகையளித்த பிறகு, செய்தியாளர்களிடம் ரமணன் பேசினார்.
அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, தனது முன்னுரிமைகளில் ஒன்றாக இத்திட்டம் விளங்கும் என அவர் கூறினார்.



