
கிள்ளான், டிசம்பர் 5 – போர்ட் கிள்ளானில் மிகவும் பிரபலமான சக்தி வாய்ந்த ஸ்ரீ நாகம்மாள் ஆலயம், இன்று ம.இ.காவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மிகவும் கோலாகலமாக குடமுழக்கம் கண்டது.
ஜாலான் செரோஜாவில் பல ஆண்டுகளாக அருள் ஆசி வழங்கி வருகின்ற ஸ்ரீ நாகம்பாளுக்கு, இன்று அதிகாலை தொடங்கி ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
சக்தியின் வடிவான நாகம்பாள் குடிக்கொண்டிருக்கும் அவ்வாலயத்தில் சரியாக 6 மணிக்கு மேல் புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகல் 12 மணிக்கு அலங்காரத் தீபாராதனை, மகேஸ்வர பூஜையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது.
பக்தி முழக்கங்கள் விண்ணை எட்ட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளைத் தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில், ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் உட்படப் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நாகம்பாளின் ஆசி பெற்றுச் சென்றனர்.