
புத்ராஜெயா, நவம்பர்-8 – சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கங்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன என்பதை விளக்குமாறு, டிக் டோக் நிறுவனத்தை மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு டிக் டோக் வாயிலாக ஆள் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியானதை அடுத்து, மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MACC அந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கணிசமான சம்பளம் என்ற பெயரில் டிக் டோக் வழியாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, இங்கிலாந்தின் மென்செஸ்டருக்கு போதைப்பொருளை லாவகமாகக் கடத்துவதற்காக, கும்பல்கள் அப்பாவி மக்களைப் பயன்படுத்தியுள்ளன.
அப்படி ‘ஏமாந்துபோன’ ஜோகூரைச் சேர்ந்த 2 ஜோடிகள் அண்மையில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்.
இதையடுத்தே, “குற்றவியல் நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படும் உள்ளடக்கம் அல்லது விளம்பரங்களுக்கான கண்காணிப்பு வழிமுறை மற்றும் உள் அமுலாக்கம் குறித்து டிக் டோக்கிடம் அதிகாரப்பூர்வ விளக்கத்தைக் கேட்டுள்ளோம்” என MCMC ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தவறான இணையப் பயன்பாடு மற்றும் குற்றச்செயல் நோக்கங்களுக்காக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவை, 1998-ஆம் ஆண்டு தகவல் மற்றும் தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழ் கடும் குற்றமாகும் என்பதையும் MCMC மேற்கோள் காட்டியுள்ளது.
அதே சமயம், சமூக ஊடகங்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை அப்படியே நம்பி விடாமல், பொது மக்களும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டுமென MCMC அறிவுறுத்தியது.



