
வாஷிங்டன், ஜனவரி-23-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் கையில் அடிபட்ட காயம் இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி, அவரின் உடல்நிலை குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சுவிட்ர்சலாந்து, டாவோஸில் உலகப் பொருளாதார ஆய்வரங்கில் பங்கேற்றப் பிறகு, ஒரு 50 காசு நாணயத்தை விட சற்று பெரிதாக அவரின் இடது கையில் கண்ணிப் போன காயம்தான் தற்போது பேச்சுப் பொருளாகியுள்ளது.
எனினும், ட்ரம்பின் உடல்நிலை குறித்த ஆருடங்களை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
மாறாக, மேசையின் முனையில் கையை மோதி கொண்டதாலேயே அக்காயம் ஏற்பட்டதாக அது கூறிக் கொண்டது.
79 வயது ட்ரம்ப், கடந்தாண்டு இரண்டாவது தவணையாக வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து அவரது வலது கையில் கண்ணிப் போன காயமும் வீக்கமும் இருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அது யாருக்கும் தெரியாத வண்ணம் பிளாஸ்டர் மூலமாகவோ அல்லது ஒப்பனை மூலமாகவோ மறைக்கப்பட்டு வந்தது.
இதற்கு முன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ட்ரம்ப் தினமும் ஆஸ்பிரின் மருந்தை அதிக அளவில் உட்கொள்வதால், அவருக்கு எளிதில் அடிபட்ட காயம் உருவாகும் நிலை உள்ளதாகக் கூறப்பட்டது.
ஆஸ்பிரின் மருந்தை பயன்படுத்துவது தனது இதய நலத்திற்கான தனிப்பட்ட முன்னெச்சரிக்கை என ட்ரம்பும் செய்தியாளர்களிடம் கூறி வருகிறார்.



