
கலிபோர்னியா, ஜூலை 1- கடந்த ஞாயிற்றுக்கிழமை, 14 தளங்கள் கொண்ட டிஸ்னி பயணக் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற, அக்குழந்தையின் தந்தை கடலில் குதித்த நிலையில், அவ்விருவரும் மீட்பு பணி குழுவினரால் காப்பாற்றப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளன.
அந்நபர் தனது மகளின் புகைப்படத்தை எடுத்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், மீட்பு பணி குழுவினரின் உடனடி நடவடிக்கையால் இரு உயிர்களையும் காப்பாற்ற முடிந்ததென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4,000 பேர் பயணிக்கக்கூடிய டிஸ்னி கப்பல் நான்கு நாட்கள் பயணத்தை மேற்கொண்டு விட்டு, திரும்பி செல்லும்போது அச்சிறுமி கடலில் தவறி விழுந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, 25 பேர் பயணக் கப்பல்களிலிருந்து கடலில் விழுந்தனர் என்றும், அதில் ஒன்பது பேர் மட்டுமே தண்ணீரில் இருந்து காப்பாற்றப்பட்டனர் என்றும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.