
டெங்கில், ஏப்ரல் 11 – மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்ற விவகாரம் சுமூகமான தீர்வை எட்டி இப்போதுதான் ஒரு அமைதி நிலவியுள்ள நிலையில், அதே போன்ற சம்பவம் டெங்கிலில் நடந்திருப்பதாக ஒரு காணொளி வைரலாக்கப்பட்டு சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
சிலாங்கூர் டெங்கிலில் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 4 ஹெக்டர் நிலத்தில், 25 ஆண்டுக் காலமாக இந்திய குடும்பமொன்று கோயில் கட்டியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனுடையே, இவ்விவகாரம் குறித்து ஆராய்ந்த போது, அங்கு கட்டப்பட்டிருப்பது ஆலயமல்ல, மாறாகா அங்கு வசிக்கும் இந்திய குடும்பத்தின் வீடும், ஆட்டுக் கொட்டகை, மாட்டுக் கொட்டகை, மற்றும் அவர்கள் வழிப்பட பூஜை பகுதி மட்டும்தான்.
அது பொதுமக்களுக்கான ஆலயம் அல்ல என கூறியுள்ளார் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரும் செப்பாங் தொகுதியின் நிரந்தர தலைவருமான டத்தோ வீ.குணாளன்.
இவ்விவகாரம் தொடர்பாக சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றமான MAIS, வந்து பார்த்தபோது, அவர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
புத்ராஜெயா மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டபோது, அப்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய குடும்பங்களில் இந்த குடும்பமும் ஒன்று. அப்போது, மாநாகராட்சி மன்றம், இந்த நிலத்தில் தங்குவதற்கு அனுமதி கடிதமும் வழங்கியதாகவும், ஆனால், அக்கடிதம் வெள்ளத்தில் காணாமல் போய் விட்டதாகவும் அக்குடும்பம் கூறியுள்ளது.
இதனிடையே, மசூதிக் கட்டுவதற்காக நிலமும், நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டதால், அதன் கட்டுமானத்தை MAIS விரைவுப்படுத்த வேண்டும் என கேட்டு வருகிறது மசூதியை கட்டவுள்ள பிரிவினர்.
மஸ்ஜித் இந்தியா சம்பவம் போல் ஆகாதிருக்க, சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றமான MAIS இப்போதே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்பத்தில் சிறிய வழிபாட்டுத்தலமாக இருந்தது இப்போது பெரியக் கோயிலாகியுள்ளது என அப்பிரிவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வேளையில் அப்பகுதிக்கு வருகை மேற்கொண்ட குணாளன்,
இது மசூதி கட்டுவதற்கான இடம் என கூறப்படுகிறது. எனவே, நிலம் தொடர்பான இந்த பிரச்சனையை சமயப் பிரச்னையாக்க வேண்டாம் எனவும் சுமூகமான தீர்வை யோசிப்போம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.