
கோலாலம்பூர், ஜன 23 – கோலா லங்காட்டின் தஞ்சோங் செப்பாட்டில் (Tanjung Sepat ) உள்ள ஒரு பகுதி பன்றிக் கழிவுகளால் மாசுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் சுற்றுச்சூழல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த புகார் குறித்து கவனிக்கும்படி தனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாக சிலாங்கூர் சுற்றுச் சூழல் துறையின் தலைமை இயக்குநர் வான்டி யாட்ஷிட் ( Wandi Yadzit ) தெரிவித்தார்.
Tanjung Sepat வட்டாரத்திலுள்ள பன்றிப் பண்ணைகள் முறையான சுத்தகரிப்பு இன்றி அல்லது விதிமுறைகளை பின்பற்றாமல் பன்றிக் கழிவுகளை கொட்டுவதால் அவை மலாக்கா நீரிணையில் பாய்வதாக நேற்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் பாடில் ஷாரி ( Ahmad Fadhil Shaari ) குற்றச்சாட்டியிருந்தார்.
இந்த சூழ்நிலை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதோடு , உடனடியாக கவனிக்கப்படாவிட்டால், அப்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடிய அபாயம் ஏற்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார். சுற்றுச்சூழல் துறை மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் துறை மூலம் கூட்டரசு அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



