தந்தையின் பிடிவாதம்; 5.5 கிலோ டுரியானை ஒரேயடியாக சாப்பிட்டு முடித்த குடும்பம்

தாய்லாந்து, செப்டம்பர் 20 – கடந்த செவ்வாய்க்கிழமை தாய்லாந்து விமான நிலையத்தின் வெளிப்புறத்தில் ஒரு சீனக் குடும்பத்தினர் 5.5 கிலோ டுரியானை உண்டு முடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சீன ஆடவர் தனது தந்தை, விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே அந்த காலை புதிய டுரியான்களை வாங்கியதாகவும், அதை குடும்பமாக சேர்ந்து சுவைத்துவிட்டு விமான நிலையத்தை அடையத் திட்டமிட்டதாகவும் கூறினார்.
ஆனால் வழியிலேயே மற்ற உணவுகளை சாப்பிட்டதால், விமான நிலையம் சென்றபோது டுரியான் பெட்டிகள் அப்படியே இருந்ததைத் தொடர்ந்து விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாததால் தனது தந்தையின் பிடிவாதத்தால் 5.5 கிலோ டுரியானை அங்கேயே சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று விளக்கமளித்தார்.
அவர் பகிர்ந்த வீடியோவில், தந்தை மகிழ்ச்சியாக டுரியானை திறக்க, மகன் முகம் சுளித்துக் கொண்டே சாப்பிடும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானத்தினுள் நுழைந்த பிறகும் அதன் மணம் நீங்காமல் இருந்ததால், அந்நபர் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இக்காணொளியைக் கண்ட வலைத்தளவாசிகள் தங்களின் விமான நிலையத்தில் டுரியான் சாப்பிட்ட அனுபவங்களைப் பகிர்ந்து வந்தனர்.