
தெஹ்ரான், மார்ச் 27- தனது பகைமை நாடுகளுக்கு விளையாட்டுக் குழுக்கள் பயணம் செய்வதற்கு ஈரான் தடைவிதித்துள்ளது.
தனது விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானிய விளையாட்டு வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, விரோதிகளாக கருதப்படும் நாடுகளில் தேசிய மற்றும் கிளப் அணிகள் இருப்பது மறு அறிவிப்பு வரும் வரை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், போட்டிகள் நடைபெறும் இடங்களை மாற்றுவதற்காக, ஈரானிய காற்பந்து சங்கம் , மற்றும் கிளப்புகள் ஆசிய காற்பந்து சம்மேளனத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது டிராக்டர் FC கிளப் அணி, ஐக்கிய அரபு சிற்றரசு அணியுடன் சவுதி அரேபியாவில் விளையாடுவதை ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் எந்த மைதானங்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது எந்த நாடுகள் விரோதமானவை எனக் கருதப்படுகின்றன என்பதை ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடவில்லை.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு ஈரான் தகுதி பெற்ற போதிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே பிப்ரவரி பிற்பகுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து, உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் ஈரானின் பங்கேற்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஈரானின் தேசிய அணி அமெரிக்காவில் விளையாடுவதை வரவேற்றாலும், அது அவர்களின் “உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு” பொருத்தமானதாக இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இம்மாத தொடக்கத்தில் கூறியிருந்தார். உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவது குறித்து, அனைத்துலக காற்பந்து சம்மேளனமான பிபாவுடன் ஈரான் காற்பந்து சங்கம் பேச்சு நடத்தி வருவதாக அதன் தலைவர் Mehdi Taj கடந்த வாரம் தெரிவித்தார்.



