
சுபாங் ஜெயா, ஜூலை-15- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் தனியார் பல்கலைக்கழக மாணவி, அவரின் முன்னாள் காதலனால் கழுத்தில் கத்தியால் கீறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் 20 வயது அந்த வெளிநாட்டு மாணவி படுகாயமடைந்தார். மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
21 வயது வெளிநாட்டவரான சந்தேக நபர் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டதை, சுபாங் ஜெயா போலீஸ் உறுதிப்படுத்தியது. தாக்குதலுக்கானக் காரணம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த அத்தாக்குதல் குறித்த போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக, அதன் நிர்வாகம் அறிக்கையொன்றில் கூறியது.
விசாரணைகள் நடைபெறுவதால் யூகங்களைக் கிளப்ப வேண்டாம் எனவும் அது பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.
பாதிக்கப்பட்ட பெண் வலியால் துடிப்பதையும், சக மாணவிகள் முதலுதவிகள் வழங்கி அவரை ஆசுவாசப்படுத்துவதையும், முன்னதாக வைரலான வீடியோக்களில் காண முடிந்தது.