
கோலாலம்பூர், டிசம்பர்-3- கோலாலம்பூரில் spa ஆரோக்கிய மற்றும் புத்துணர்ச்சி மையத்தில் போலீஸ் நடத்திய சோதனையை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தற்காத்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் அங்கு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
‘இது தனியுரிமை மீறல் அல்ல, பொது இடத்தில் இடத்தில் நடந்தது’ என அவர் சுட்டிக் காட்டினார்.
‘எந்த மதமும் ஆதரிக்க முடியாத ஒழுக்கமற்ற செயல்’ என்றும் அவர் சாடினார்.
தவிர, தடாலடியாக போலீஸ் களத்தில் இறங்கவில்லை; அம்மையத்தில் நடப்பவற்றை வாரக்கணக்கில் தீவிரமாக கண்காணித்து உளவுப் பார்த்த பிறகே சோதனையை மேற்கொண்டது; எனவே தனியுரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களைக் கையாளும் நடைமுறை தொடர்பில் சில சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக சைபஃபுடின் குறிப்பிட்டார்.
போலீஸாரின் அச்சோதனை மனித உரிமை மீறல் என, PSM இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் Aimam Sees உள்ளிட்ட சிலர் முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதோடு கைதுச் செய்யப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்கள் சமூக ஊடகங்களில் கசிந்ததையும் அவர்கள் விமர்சித்தனர்.
மருத்துவர், ஆசிரியர்கள், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட 17 அரசாங்க ஊழியர்களும் அச்சோதனையில் கைதானது முன்னதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அவர்களைத் தடுத்த வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்காததால் 171 பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஓரினச்சேர்க்கை நடந்ததாகவோ அதில் யாரும் பாதிக்கப்பட்டதாகவோ ஆதாரம் எதுவும் இல்லாததால், விசாரணையை முன்னெடுத்துச் செல்ல இயலாது என போலீஸும் கூறியது.
என்றாலும், கைதான முஸ்லீம்கள் சிலரிடம் கூட்டரசு இஸ்லாமிய சமயத் துறையான JAWI வாக்குமூலங்களை பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.



