கோலாலம்பூர், டிசம்பர்-27 – கோலாலம்பூர் பண்டார் தாசேக் செலாத்தான் LRT நிலையத்தில் டிசம்பர் 21-ல் நிகழ்ந்த சண்டை தொடர்பில், கால்பந்து இரசிகர்கள் என நம்பப்படும் 8 பேர் கைதாகியுள்ளனர்.
ஏற்கனவே டிசம்பர் 24-ல் கைதான இருவரும் அதிலடக்கமென, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா (Datuk Rusdi Isa) தெரிவித்தார்.
கலவரத்தில் ஈடுபட்டது மற்றும் பொது சொத்துக்களைச் சேதப்படுத்தியதன் பேரில் அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை முடிந்து போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக அரசு தரப்புத் துணைத் தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி சொன்னார்.
சுமார் 20 முதல் 30 பேருக்கு இடையில் மூண்ட அச்சண்டையில், ஒருவரையொருவர் குத்திக் கொண்டும், LRT இரயில் கதவுகளை எட்டி உதைத்தும், குப்பைத் தொட்டிகளை வீசியும் அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துள்ள Prasarana நிறுவனம், ஏற்பட்ட சேதாரங்களுக்கு இழப்பீடும் கோரியுள்ளது.