
கோலாலம்பூர், பிப்ரவரி-25 – சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கு வரும் சனிக்கிழமைத் தொடங்கி அமுலுக்கு வரவிருந்த, வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறை, 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான இன்றைய சிறப்பு விளக்கக் கூட்டத்தின் போது, அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிப்ளி அஹ்மாட் அதனைத் தெரிவித்ததாக, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் கூறினார்.
கலந்தாய்வுகளுக்குப் பிறகு, சுகாதாரப் பணியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய வேலை நேர முறையின் கீழ் தாதியர்கள் கூடுதலாக 3 மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது; இது தாதியர்களிடையே பெரும் கவலையை உண்டாக்கியுள்ள நிலையில், இந்த 3 மாதங்களில் அதற்கு ஒரு நல்ல தீர்வு காணப்படுமென லிங்கேஷ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இது தற்காலிகமே என்றாலும், KKM பணியாளர்களுக்கான வேலை நேரம் நியாயமாக இருப்பதை உறுதிச் செய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.
ஷிஃவ்ட் முறையில் வேலை செய்யும் தாதியர்களுக்கு, பொதுச் சேவை ஊதிய முறையின் கீழ், நடப்பில் 42 மணி நேரமாக உள்ள வேலை நேரத்தை, 45 மணி நேரமாக மாற்றுவதற்கு உத்தரவு வந்தது முதலே இவ்விவகாரம் சர்ச்சையானது.
MNU எனப்படும் மலாயா தாதியர் சங்கமும் அதன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே வேலைப் பளுவால் திணறி வரும் தாதியர்களுக்கு, இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்; இதனால் தாதியர்கள் அரசாங்க மருத்துவமனைகளிலிருந்து பெருமளவில் வெளியேறலாமென MNU அச்சம் தெரிவித்தது.
அப்புதிய உத்தரவு கடந்தாண்டு நவம்பரில் வெளியானது; எனினும், பெரும் எதிர்ப்பைப் பெற்றதால், டிசம்பர் 1-ஆம் தேதி அமுலுக்கு வர வேண்டிய அவ்வேலை முறை இவ்வாண்டு மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.