
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரதமர் அன்வார் இப்ராஹிமை பெரிக்காத்தான் நேஷனல் இன்று பாராட்டியுள்ளது.
இம்முயற்சிகளில் மலேசியர்களின் எந்தவொரு ஈடுபாட்டையும் கூட்டணி வரவேற்பதாக PN துணைத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்சா ஜைனுடின் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி அன்று, அன்வர் தலைமையில் புத்ராஜெயாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து, தாய்லாந்தும் கம்போடியாவும் நிபந்தனையற்ற மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய அமைதியை நிலைநிறுத்துவதில் மலேசியா நிலையாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வகையான கொடுமை மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயல் பட வேண்டுமென்றும் ஹம்சா அறிவுறுத்தியுள்ளார்.
காசாவில் நடந்து வரும் இனப்படுகொலை, கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட போர், மத்திய கிழக்கில் நீடித்த மோதல்கள் மற்றும் தாய்லாந்து கம்போடியா பதட்டங்கள் ஆகிய அனைத்தும் மலேசியாவில் நேரடி அல்லது மறைமுக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் நாட்டின் நலன்களை பாதுகாக்க, பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் முழு அமைச்சரவையும் தங்கள் அறிக்கைகள் அமைதியாகவும் அளவிடப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளன என்று அறியப்படுகின்றது.