
கோலாலம்பூர் , ஆக 25 – சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைத் தூண்டிய பதிவுகளை X செயலியில் பதிவிட்டதற்காக 37 மற்றும் 43 வயதுடைய இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.
முதல் விவகாரத்தில் X பயனர் ஒருவர், மலேசியா தீவிரவாதிகளால் கைப்பற்றப்படும் என்பதோடு நாட்டில் புரட்சி ஏற்படும் என்றும் பதிவிட்டிருந்தார் என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.
இரண்டாவது விவகாரம் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் வீட்டின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்த கருத்துகள் குறித்து ஜூலை மாதம் பதிவிட்ட பயனர் சம்பந்தப்பட்டிருந்தது என அவர் கூறினார்.
சிரியாவின் டமாஸ்கஸில் இஸ்ரேலின் விமானத் தாக்குதல்களை பிரதமர் விமர்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக அந்த பதிவேற்றம் இருந்தது.
பொதுமக்களிடையே அச்சுறுத்தல் அல்லது பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் இணைய வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியது தொடர்பில் முதல் விவகாரம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
இரண்டாவது விவகாரம் குற்றவியல் மிரட்டல், பொதுமக்களுக்கு பயம் அல்லது பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் இணைய வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த இரண்டு நபர்களும் நேற்று கைது செய்யப்பட்டதோடு முதல் ஆடவர் நாளைவரையும் மற்றொரு சந்தேகப் பேர்வழி இம்மாதம் 28ஆம் தேதிவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குமார் கூறினார்.