
தெமர்லோ, ஜூலை-28- பஹாங், தெமர்லோவில் குடும்பத்தார் மறதியில் விட்டுச் சென்றதால், 5 வயது சிறுவன் உணவகத்தில் தனியே கிடந்த சம்பவம் நடந்துள்ளது.
Selera Timur எனும் உணவகத்தில் இரவு 10 மணிக்கு சிறுவன் தனியாக இருப்பதைக் கண்டு பொது மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக உணவகம் விரைந்த போலீஸ், சிறுவன் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்தது; எனினும் அவனால் தெளிவாகப் பேச முடியவில்லை என தெமர்லோ போலீஸ் கூறியது.
சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை அடையாளம் காணும் வரை, அவனை தங்கள் பாதுகாப்பில் போலீஸ் வைத்துக் கொண்டது.
இந்நிலையில், உணவகத்திலிருந்து 2 கார்களில் கிளம்பிய குடும்பத்தார், ஒன்றரை மணி நேரங்களுக்குப் பிறகு குவாந்தான், Gambang பகுதியை அடைந்தபோதே மகன் காணவில்லை என்பதை உணர்ந்தனர்.
இதனால் பதறியடித்துகொண்டு உணவகத்திற்குத் திரும்பியவர்கள், பின்னர் தெமர்லோ போலீஸ் நிலையம் சென்று பின்னிரவு 12.40 மணிக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர்.
உணவகத்திலிருந்து கிளம்பும் போது மாமாவின் காரில் சிறுவன் ஏறியிருக்க வேண்டும்; ஆனால் அவன் ஏறாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, அதை கவனிக்காமல் கார் கிளம்பியது விசாரணையில் தெரிய வந்தது.