தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரத்தில் சீன நாட்டுக் கொடி பறக்க விடப்பட்ட சம்பவம்; மன்னிப்புக் கோரிய ஏற்பாட்டுக் குழு

தெலுக் இந்தான், அக்டோபர்-25, செப்டம்பர் 13-ஆம் தேதி பேராக், தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரத்தில் தங்லோங் விழா கொண்டாட்டத்தின் போது சீன நாட்டு கொடிகள் பறக்கவிடப்பட்ட சம்பவத்திற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
அது தற்செயலாக நடந்து ஒன்று என, குவான் கோங் பண்பாட்டு சங்கத்தின் தலைவர் சூன் பூன் ஹுவா (Soon Boon Hua) கூறினார்.
அங்கு நடைபெற்ற அனைத்துலக குவான் கோங் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த சீன பிரஜைகள், அவர்களாகவே தங்கள் நாட்டு கொடியை பறக்க விட்டனர்.
எனினும், அது நடந்திருக்கக் கூடாது என்பதால், ஏற்பாட்டுக் குழு சார்பில் தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், இனியும் அது போன்று நிகழாதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென உறுதியளிப்பதாகவும் பூன் ஹுவா சொன்னார்.
விழாவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத சீன நாட்டுக் கொடிகள் அங்கு பறக்கவிடப்பட்டதன் அவசியமென்ன என, பேராக் பாஸ் கட்சி ஆணையர் ரஸ்மான் சாக்காரியா (Razman Zakaria) முன்னதாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
சீன கோவிலொன்று ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்வை வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கா கோர் மிங் தொடக்கி வைத்தார்.
DAP கட்சியைச் சேர்ந்த பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவரும் அதில் பங்கேற்றார் என, சாக்காரியா கூறிக் கொண்டார்.
பொது இடங்களிலோ அல்லது பள்ளிகளிலோ தேசியக் கொடிகள் உள்ளிட்ட அந்நிய நாட்டு சின்னங்களை காட்சிப்படுத்தக் கூடாது என்பது 1949-ஆம் ஆண்டு தேசிய சின்னங்கள் சட்டத்தின் விதியாகும் என்பதை ரஸ்மான் சுட்டிக் காட்டினார்.
இதனால், நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான அச்செயலை, மக்கள் பிரதிநிதிகளும் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடுமென்றார் அவர்.