
புத்ராஜெயா, ஜனவரி-24-அரசாங்கம் முன்மொழிந்த URA எனப்படும் நகர புதுப்பித்தல் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முழுமையான மேம்படுத்தலுக்கு உட்படுத்த ஏதுவாக அமைச்சரவை அம்முடிவைச் செய்திருப்பதாக, ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
நகர்ப்புற வீடமைப்பு குறிப்பாக ஏழை நகரவாசிகள் சம்பந்தப்பட்ட விவகாரம் கவனமாகவும் நியாயமாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை அமைச்சரவை உணர்ந்துள்ளது.
எனவே, சில திருத்தங்கள் மீண்டும் நன்காராயப்பட்டு, புதிய வடிவில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
நாடாளுமன்றத்தில் எழுந்த கவலைகள் மற்றும் அம்னோ தலைவர்கள், அமைச்சரவை சகாக்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளதன் அடிப்படையிலும் இம்டிவு அமைவதாக அவர் சொன்னார்.
காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அரசாங்கம் நியாயமான மற்றும் விரிவான சட்டத்தை கொண்டு வர உறுதியளித்துள்ளது என, தொடர்புத் துறை அமைச்சருமான ஃபாஹ்மி கூறினார்.
பழையதும், பாழடைந்ததும், பாதுகாப்பற்றதாகவும் உள்ள நகர்ப்புறங்களை புதுப்பிக்கும் நோக்கில் இந்த URA சட்ட மசோதாவை வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சு கொண்டு வந்தது.
எனினும், பிரதமரே உத்தரவாதம் அளித்தும் கூட, ‘ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாகக்’ கூறி ஆரம்பத்திலிருந்தே இம்மசோதாவுக்கு எதிர்கட்சிகள் மட்டுமின்றி ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



