
கோலாலாம்பூர், செப்டம்பர்-19 – நகரப் புதுப்பிப்புச் சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைமையிலான மாநிலங்களின் செயல் குறித்து, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் 534 இடங்களை மாநில அரசுகள் முன்மொழிந்துள்ளன; இதில் கெடாவில் 55, திரங்கானுவில் 22, கிளந்தானில் 4 இடங்கள் அடங்கும்.
அவற்றில் சில இடங்கள் பாஸ் தலைமையிலான மாநில அரசாங்கங்களால் 10 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழியப்பட்டவை; ஆனால் அரசிதழில் இடம் பெற்றப் பிறகும் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
“தாங்கள் முன்மொழிந்ததை இப்போது அவர்களே எதிர்க்கிறார்களா? அதை மக்களே தீர்மானிக்கட்டும்” என அந்த உத்தேச சட்ட மசோதா தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டத்தில் ங்கா கோர் மிங் கூறினார்.
அம்மசோதாவை எதிர்த்து பாஸ் இளைஞர் பிரிவு வரும் அக்டோபர் 4-ஆம் தேதி பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது; இச்சட்டம் குடியிருப்பாளர்களின் நலனை காக்கவில்லை என்பதே அவர்களின் வாதம்.
இதற்கு பதிலளித்த ங்கா கோர் மிங், அமைதிப் போராட்டத்தை அரசாங்கம் மதிக்கும் என்றார்; ஆனால் இது போன்ற அரசியல் நாடகத்துக்கு பதிலாக பாஸ் அரசாங்கம் ஏற்கனவே gazette செய்த பகுதிகளை கவனிக்க வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
நகரப் புதுப்பிப்பு மசோதா, கடந்த மாதம் மக்களவையில் முதல் வாசிப்புக்கு விடப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.