காஜாங், அக்டோபர்-20, 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதியக் குறைந்தபட்ச சம்பளமான 1,700 ரிங்கிட், மனிதவள அமைச்சு கூறிக்கொள்வது போல் அனைத்துத் தொழிலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றல்ல.
மலேசிய சோசலிசக் கட்சியான PSM-மின் கோரிக்கை ஈராயிரம் ரிங்கிட் என அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார்.
மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரசான MTUC ஒட்டுமொத்தத் தொழிலாளர்களில் 6 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களையே பிரதிநிதிக்கிறது.
அப்படியிருக்க அவர்களின் ஆதரவை வைத்து, அதுவோர் ஏகமனதான முடிவாக அமைச்சு எப்படி கூறமுடியும் என அருட்செல்வன் கேட்டார்.
புதியக் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் கலந்தாய்வுகளில் PSM சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
சந்திப்புக்கு நேரம் கேட்டு மனிதவள அமைச்சருக்கும், குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான தேசிய ஆலோசக மன்றத்துக்கும் (NWCC) நாங்கள் அனுப்பியக் கடிதமும் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆரம்ப காலம் தொட்டே நாட்டில் குறைந்தபட்ச சம்பளத்திற்காக கடுமையாகப் போராடி, அது சட்டமாக இயற்றப்படும் அளவுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ள PSM கட்சியை இப்படி நடத்தியிருக்கக் கூடாது என அருட்செல்வன் ஏமாற்றம் தெரிவித்தார்.
PSM வலியுறுத்துவது 2,000 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்தை; மத்திய வங்கியான பேங் நெகாராவின் ஆய்வுகளும் அதனை ஆதரிக்கின்றன.
நியாயப்படியும் நிதர்சனமாகவும் பார்த்தால் அத்தொகை நகர்புறங்களில் 2,568 ரிங்கிட்டாகவும், கிராமப் புறங்களில் 1,884 ரிங்கிட்டாகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் சொன்னார்.