
புத்ராஜெயா, ஏப்ரல்-3-தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு, ஒற்றுமை வார விழா 2026 நிகழ்ச்சியை இவ்வாண்டு மீண்டும் நடத்துகிறது.
நான்காவது ஆண்டாக நடைபெறும் இவ்விழா, இவ்வாண்டு Bersama Membina Negara Bangsa அதாவது ‘ஒன்றிணைந்து தேசத்தை நிர்மாணிப்போம்’ என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை நாடு முழுவதும் 6 இடங்களில் இவ்விழா கொண்டாடப்படும் என, அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கூறினார்.
பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதையும், ஒற்றுமையை வலுப்படுத்துவதையும் இவ்விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிழக்கு மண்டலத்திற்கான நிகழ்வு ஏப்ரல் 9 முதல் 11 வரை கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெறும்.
வட மண்டலத்திற்கான நிகழ்ச்சி, ஏப்ரல் 23 முதல் 26 வரை பேராக், ஈப்போவிலும், தென் மண்டலத்திற்கான நிகழ்வு மே 8 முதல் 10 வரை மலாக்காவிலும், மத்திய மண்டலத்திற்கான நிகழ்வு மே 15 முதல் 17 வரை கோலாலாம்பூரிலும் நடைபெறும்.
சரவாக்கில் மே 8 முதல் 10 வரை மீரியிலும், பின்னர் தேசிய அளவிலான ஒற்றுமை வாரக் கொண்டாட்டம் ஜூன் 11 முதல் 14 வரையில் சபா, லிக்காஸ் அரங்கிலும் நடைபெறும்.
இந்த ஒற்றுமை விழாவை ஜூன் 13-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
இந்த ஒற்றுமை வாரக் கொண்டாட்டங்களில் கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், ஒற்றுமை ஓட்டம், சமூக விற்பனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இவ்விழா, மலேசியர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



