கோலாலம்பூர், ஜனவரி-1, கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று முழுமையாக பொது மக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
அப்பகுதி, மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பானதே என கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL கூறியது.
ஒருவேளை திடீர் பள்ளமேதும் ஏற்படும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக புகாரளிக்குமாறும் பொது மக்களை அது கேட்டுக் கொண்டது.
இந்திய பிரஜையின் உயிரை பலிகொண்ட நில அமிழ்வு சம்பவத்தால் பொது மக்களுக்கு மூடப்பட்டிருந்த ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலையின் ஒரு பகுதி, முன்னதாக நவம்பர் 10-ஆம் தேதி திறக்கப்பட்டது.
அப்பகுதி, ஜாலான் மஸ்ஜித் இந்தியா போலீஸ் குடில் மற்றும் வணிகத் தளங்களுக்கு இடையிலான பாதையை உட்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பிப்ரவரி வாக்கில் தான் அப்பகுதியைத் மீண்டும் முழுமையாகத் திறக்க அட்டவணையிடப்பட்டிருந்தது.
ஆனால் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவடைந்ததால், முன்கூட்டியே நேற்றே அப்பகுதி முழுவதுமாகத் திறக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கியதில், இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலட்சுமி என்பவர் விழுந்து காணாமல் போனார்.