
வாஷிங்டன், மார்ச்-3 – அமெரிக்க நிறுவனமொன்றின் விண்கலம், விண்வெளியில் நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது.
அந்த மைல் கல் சாதனையைப் படைத்த இரண்டாவது தனியார் நிறுவனமாக Firefly Aerospace திகழ்கிறது.
அதே சமயம் செங்குத்தாகச் அச்சாதனையைப் புரிந்த முதல் தனியார் நிறுவனமாகவும் அது பெயர் பதித்துள்ளது.
Firefly Aerospace-சின் Blue Ghost Mission 1 விண்கலம் நிலவின் வடகிழக்கே அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 3.34 மணிக்குத் தரையிறங்கியது.
விண்கலம் பாதுகாப்பாக நிலவைத் தொட்ட கையோடு, டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஏவுதள கட்டுப்பாட்டு மையப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
நிலவில் எடுக்கப்பட்ட முதல் படத்தை விரைவிலேயே விண்கலம் பூமிக்கு அனுப்புமென எதிர்பார்க்கப்படுகிறது.
விண்கலம் தற்போது வரை நிலைத்தன்மையுடனும் செங்குத்தாகவும் உள்ளது என அந்நிறுவனத்தின் CEO ஜேசன் கிம் கூறினார்.
கடந்தாண்டு பிப்ரவரியில் நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் பக்கவாட்டில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 15-ல் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், நிலவின் மண்ணை பரிசோதிக்கும் கருவி, கதிர்வீச்சை தாங்கும் கணினி உட்பட, 10 உபகரணங்களை ஏந்திச் சென்றுள்ளது.
வரும் 14-ஆம் தேதி நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் மற்றும் 16-ஆம் தேதி நிலவிலிருந்து சூரிய அஸ்தமனத்தையும் இந்த விண்கலம் படம் பிடித்து பூமிக்கு அனுப்பவுள்ளது.
இதே Blue Ghost விண்கலத்துடன் ஏவப்பட்ட ஜப்பானிய விண்கலம், வரும் மே மாதம் நிலவில் தரையிறங்க உள்ளது.