
சிரம்பான், ஜூலை-21- நீதித்துறை நியமனங்கள் குறித்து விமர்சனம் செய்து, அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய 9 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கட்டொழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் Dr ஃபுசியா சாலே (Dr Fuziah Salleh) அதனை உறுதிப்படுத்தினார்.
அந்த 9 எம்.பிக்களும் மக்கள் தொடர்பான பிரச்னை குறித்தே தங்களின் கவலைகளை வெளிப்படுத்தினர்.
எனவே அவர்களை இடைநீக்கம் செய்யும் பேச்சே எழவில்லை என, கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நெகிரி செம்பிலான் பி.கே.ஆர் தொண்டர்களுடனான சந்திப்பில் கூறியதாக, ஃபுசியா தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுபோன்ற விவகாரங்களை எழுப்ப உரிமையுண்டு; என்னதான், விமர்சனங்கள் அல்லது அதிருப்திகளை பொதுப்படையாக பேசும் முன் கட்சி அளவில் விவாதித்திருக்க வேண்டுமென்றாலும், அவர்களை இடைநீக்கம் செய்யும் அளவுக்கு அதுவொன்றும் பெரிய குற்றமல்ல என, அன்வார் தெளிவுப்படுத்தினார்.
சிரம்பானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாநில பி.கே.ஆர் தொகுதித் தலைவர்களுடன் அன்வார் இரகசிய சந்திப்பு நடத்தியப் பிறகு, ஃபுசியா செய்தியாளர்களிடம் பேசினார்.
நீதித்துறை நியமனங்கள் குறித்து பாண்டான் எம்.பியும் பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும் இதர 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னதாகக் கேள்வி எழுப்பினர்.
நீதித்துறையில் தலையீடு இருப்பதாகக் கூறப்படுவதை விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
அவர்களின் இந்நடவடிக்கை கட்சித் தலைமைக்கு எதிரானது என்றும் எனவே அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டுமென்றும் அக்கட்சியில் சில கலகக் குரல்கள் எழுந்தன.